மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின்போது மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாததால், சர்வீஸ் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான என்.எச்.45 தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், ராதாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு கிராமம் ஐயா கோயில் அருகே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்கான வடிகால் வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சர்வீஸ் சாலையில் முழங்காலுக்கு மேல் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமலும், வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதுடன், இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அவசரத் தேவைகளுக்கு ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வர முடியாத நிலை நிலவுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, தங்களது திட்டத்தில் அதற்கான ஏற்பாடு இல்லை எனப் பதிலளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆலங்காடு கிராமத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதோடு, எதிர்காலத்தில் நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




