திருப்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பேருந்தைப் பின்னோக்கித் தள்ளி இயக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.18 எண் கொண்ட அந்த அரசுப் பேருந்து, திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி வழியாக தொட்டிகிணறு சென்றுவிட்டு, மீண்டும் திருப்பத்தூரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை எதிரே வந்தபோது, பேருந்தின் என்ஜின் திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.
ஓட்டுநர் பலமுறை என்ஜினை இயக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த பயணிகள், அந்த வழியாகச் சென்றவர்களின் உதவியைப் நாடினர். பின்னர், அனைவரும் சேர்ந்து பேருந்தைப் பின்னோக்கித் தள்ளியதைத் தொடர்ந்து பேருந்து இயங்கியது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



