மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மருதங்குடி ஊராட்சிக்குட்பட்ட குமாரநத்தம் கிராமத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் பல ஆண்டுகளாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக விநியோகம் செய்யப்படும் குடிநீரும், இப்பகுதியின் நிலத்தடி நீரும் முற்றிலுமாக உப்பு நீராக மாறியுள்ளன.
இதனால், சமையல் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பனமங்கலம் மற்றும் மருவத்தூர் பகுதிகளுக்கு நடந்து சென்று, குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெண்கள் மற்றும் முதியவர்கள் குடிநீருக்காக தினமும் பல கிலோமீட்டர் தூரம் அலைக்கழிக்கப்படுவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த உப்பு நீரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் அப்பகுதி மக்களுக்கு சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, குமாரநத்தம் கிராம மக்களின் நீண்ட நாள் துயரத்தை போக்கும் வகையில், இப்பகுதிக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.









