விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், மத மோதல்களைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, பள்ளிவாசல் அருகே சிலர் சர்ச்சைக்குரிய வகையில் முழக்கங்களை எழுப்பினர். இதுதொடர்பாக நகர் காவல் நிலையப் போலீசார் இரு இளைஞர்களைக் கைது செய்தனர். தற்போது அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.
இந்நிலையில், பழனியில் வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ள பழனி பாபா நினைவேந்தல் கூட்டத்திற்கான தென் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கம்பம் சாதிக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வாய் தவறி ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவத்தை வைத்து, மத மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் ஒருசில அமைப்புகள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பி வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த வீடியோவை பதிவு செய்த சிறப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் ராஜாலிங்கம் மீதும், இதனைப் பரப்பியவர்கள் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசு இதுபோன்ற சம்பவங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீண்ட காலமாகச் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை பரோலில் விடுவிப்பது மற்றும் முதிர்ந்த கால அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தினார்.

