சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தத் தொடர் விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத பட்டாசு உற்பத்தியைத் தடுக்க காவல்துறை தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ திருத்தங்கல் பகுதியில், தகரக் கொட்டகை அமைத்து உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது காவல்துறையினரின் சோதனையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருப்பதி (37), முத்துக்குமார் (41), கணேசன் (50), ஞானசேகரன் (49), நாகார்ஜுன் (29), ராஜசேகர் (36), அந்தோணி ராஜ் (26) உள்ளிட்ட 11 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், தயாரிப்பு இடத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான ரசாயன மூலப்பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

