திருப்பத்தூர் மாவட்டம், மடவாளம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உரிய பராமரிப்பின்றி புதர்க்காடாக மாறியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், அவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் செடி, கொடிகள் மற்றும் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் மாணவர்கள் மைதானத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மைதானப் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதி சமூக விரோதிகளின் மது அருந்தும் இடமாக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்களும் முன்னாள் மாணவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். முறையான பராமரிப்பு இல்லாததால் மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் விளையாட்டு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, மைதானத்தைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

