திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடும் குளிர் மற்றும் உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் சரிந்து வருவதால் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.
இன்று அதிகாலையில் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் பதிவானது. இதனால், ஜிம்கானா புல்வெளி, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, பியர் சோலா சாலை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள புல்வெளிகள் மற்றும் செடி, கொடிகளின் மீது பனித்துளிகள் உறைந்து காணப்பட்டன. பசுமை போர்த்திய புல்வெளிகள், வெள்ளை நிறக் கம்பளம் விரித்தது போல காட்சியளித்தன.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மேற்புறத்திலும், இலைகளிலும் பனிப்படலங்கள் உறைந்து காணப்பட்டன. சூரிய ஒளி பட்டதும், புல்வெளிகளிலும் நட்சத்திர ஏரியின் அருகிலும் உறைந்திருந்த பனித்துளிகள் ஆவியாகிச் சென்ற காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. கடும் குளிரைச் சமாளிக்க, அதிகாலையிலேயே சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கம்பளி ஆடைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிந்து நடமாடுவதைக் காண முடிகிறது.









