விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் ‘ஜெய் விநாயகா கம்பி மத்தாப்பு’ பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து நேரிட்டது.
ஆலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித அட்டைகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தச் சோகம் தணிவதற்குள், தற்போது மற்றொரு பட்டாசு ஆலையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

