டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஆறாம் ஆண்டை முன்னிட்டு, 'விவசாயம் காப்போம்! விவசாயிகளைப் பாதுகாப்போம்!' என்ற முழக்கத்துடன் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பெருந்திரள் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் பேசிய தலைவர்கள், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) சட்டப்பூர்வமாக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினர். மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்தின்போது மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகளின் இலவச மின்சார சலுகையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள மின்சார மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், கடன் சுமையால் தவித்து வரும் விவசாயிகளின் அனைத்துப் பயிர்க் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு புதியLabour Codes (தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்) திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (100 நாள் வேலை திட்டம்) தொடர்ந்து செயல்படுத்தி, தினசரி ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்தி எவ்வித தாமதமுமின்றி வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் உரிமைகளைக் காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தவும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.









