வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் திடீரென மயங்கி கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி மதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், வழக்கம்போல் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். விருதம்பட்டு காவல் நிலையம் அருகே உள்ள காந்தி நகர் முத்தமிழ் மன்றம் எதிரே அமைந்துள்ள பெரிய அளவிலான திறந்தவெளி மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அருகே அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக பழனிவேல் கால்வாய் கரையோரத்தில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், நிலை தடுமாறி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விருதம்பட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கால்வாயில் இறங்கி பழனிவேலை மீட்டுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




