தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தான் யாசகம் பெற்று சேர்த்த தொகையை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). இவர் யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தை பொதுமக்களின் நலனுக்காகவும், தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் நல்லசிவனிடம் நிவாரண தொகையாக ரூ.10,0ங்காயை அவர் வழங்கினார்.
அப்போது, யாசகம் பெற்று பொதுமக்களுக்கு உதவி செய்யும் பூல்பாண்டியனின் சேவையை மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் பாராட்டினார். மேலும், "அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்களுக்குக் கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. ஆனால், நீங்கள் யாசகம் பெற்று பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல்ல மனதிற்கு இந்த ஜென்மம் மட்டுமல்லாமல் அடுத்த ஜென்மத்திலும் நல்லது நடக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் பூல்பாண்டியன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக யாசகம் பெற்று அதன் மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார்.
இதுவரை 22 மாவட்டங்களில் உள்ள 470 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கொடிநாள் நிதி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளுக்காக மொத்தம் ரூ.1 கோடியே 65 லட்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்கள் சேவைக்காகத் தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது, அங்கு பணியில் இருந்த திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சௌந்தர்ராஜன், பூல்பாண்டியனிடம் தன் பங்காக ரூ.500 வழங்கி, அதையும் நிவாரண நிதியாகச் சேர்த்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தைத் தன்னலம் கருதாமல் பொதுமக்களின் நலனுக்காகத் தொடர்ந்து வழங்கி வரும் இந்த முதியவரின் சேவை மனப்பான்மை அங்கிருந்த அனைவரிடேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.









