ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சாலையைக் கடக்க முயன்ற கணவன்-மனைவி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெத்தாம்பாளையம் பகுதியில் உள்ள கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இப்பகுதியில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும், விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் உடனடியாகப் பேரிகார்டுகளை அமைக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.








