வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கீழ்நகர் வழியாகச் செல்லும் தட்டப்பாறை ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரி, விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மீனூர் கீழ்நகர் வழியாகச் செல்லும் தட்டப்பாறை ஏரிக்கால்வாயில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு, கால்வாயைத் தூர்வாரி நீர்வரத்து சீராகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. மேலும், அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் தடையின்றி சென்று வர உரிய பாதையை அமைத்துத் தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவை அப்பகுதி விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இணைந்து குடியாத்தம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவனிடம் நேற்று நேரில் வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து உரிய பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.









