விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் முதன்மை அடையாளமாகத் திகழும் வைப்பாறு நதியைச் சீரமைக்கும் நோக்கில், 'ரன் ஃபார் வைப்பாறு' (Run for Vaippar) என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக வைப்பாற்றுப் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து ஆக்கிரமித்துள்ளதாலும், கழிவுகள் சேர்வதாலும் நதி கடுமையாக மாசடைந்து காணப்படுகிறது. அழியும் தருவாயில் உள்ள இந்நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைந்த இம்மாரத்தான் போட்டியை, சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) குருசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இப்போட்டி ஆண்களுக்கு 10 கிலோமீட்டர், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தனித்தனியாக 5 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் என 4,000-க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், இதில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் பொருட்டு, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

