விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களுக்கு, எக்காரணத்தைக் கொண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில், வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தாணிப்பாறையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, "தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலை முறைப்படுத்தவும் காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை தடையின்றி செய்து தரவும், வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அவசர காலத்தில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினருடன் ஆம்புலன்ஸ் வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

