ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட எல்லை மேடு பகுதியில், நசியனூரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மேற்கூரையை உடைத்து கயிறு கட்டி இறங்கி, பணம் மற்றும் செல்போன்களைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடந்த 18ஆம் தேதி இரவு வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். கடையை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், நள்ளிரவில் கடையின் மேல் தளத்தில் ஓட்டை இட்டு, கயிறு கட்டி உள்ளே இறங்கியுள்ளார். பின்னர், கல்லாவில் இருந்த ரொக்கம் மற்றும் பல செல்போன்களைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
மறுநாள் காலை கடையைத் திறக்க வந்த செல்வம், மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவிலிருந்த பணமும், சில செல்போன்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வம் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மர்ம நபர் கடையின் மேற்கூரையை உடைத்து கயி மூலம் உள்ளே இறங்கி திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









