Settings

முகப்பு/தமிழ்நாடு/போலி இ-சேவை மைய பயிற்சி வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தமிழ்நாடு

போலி இ-சேவை மைய பயிற்சி வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

🕒 26 அக்., 2026, 10:25 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
போலி இ-சேவை மைய பயிற்சி வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
✨

AI Highlights

  • •போலி இ-சேவை மைய பயிற்சி வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், முடங்கிய ஐடி-க்களை மீட்கவும் கோரி தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டமும், உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமும் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு செயலாளர் சேவியர் முன்னிலை வகித்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். சி.எஸ்.சி (CSC) எனப்படும் 'டிஜிட்டல் சேவா' தளத்தில் இ-சேவை வழங்குவதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், 1,000-க்கும் மேற்பட்டோரின் இ-சேவை ஐடி (ID) செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மீண்டும் இ-சேவைகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக இ-சேவை மையங்களுக்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போதைய விலைவாசி உயர்வு, கட்டட வாடகை மற்றும் பணியாளர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இ-சேவை கட்டணங்களை தமிழக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும். இ-சேவை மையங்களுக்குக் குறைந்தபட்ச மின் கட்டண மானியம் வழங்குவதோடு, சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தனியாக நலவாரியம் அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

குடும்ப அட்டையில் புகைப்படம் மாற்றுதல், பெயர் திருத்தம் செய்தல், ஸ்மார்ட் கார்டு அச்சிடுதல், பிறப்பு சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப வசதி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல் மற்றும் பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை இ-சேவை மையங்கள் மூலமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

குறிப்பாக, இணையதளங்களில் ரூ.6,000 மற்றும் ரூ.10,000 கட்டணத்தில் புதிய இ-சேவை மைய பயிற்சி என்ற பெயரில் போலி நபர்கள் மற்றும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலி கும்பலால் அரசு அங்கீகரித்த இ-சேவை மைய ஐடி-க்களை வழங்க முடியாது என்பதால், இத்தகைய போலி மையங்களைக் கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔