மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஆதரவால் இந்தியாவில் விளையாட்டுத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக, ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு அரசு வழங்கி வரும் ஆதரவு தற்போது சிறப்பான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிய விளையாட்டுக் கொள்கையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயர்நிலை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு பாராட்டுக்குரியது என்றாலும், அதன் பயன்கள் நாட்டின் அடிமட்டப் பகுதிகளில் உள்ள இளம் விளையாட்டு திறமைகளையும் சென்றடைய வேண்டும் என அபினவ் பிந்த்ரா வலியுறுத்தினார்.
இந்தியாவில் இளம் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பல்வேறு விளையாட்டுகளில் புதிய திறமைகள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது அறக்கட்டளை மூலம் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட சுமார் 250 இளம் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளில் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் அபினவ் பிந்த்ரா கூறினார்.
விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கான ஒரு வழிமுறையாக மட்டுமல்லாமல், இளைஞர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பொறுப்புள்ள சிறந்த குடிமக்களாகவும் உருவாக்கும் முக்கிய கருவி என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் விளையாட்டை தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அபினவ் பிந்த்ரா அறிவுறுத்தினார்.
வரும் பத்தாண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்பாடு தொடர்ந்து மேம்படும் என்றும் கூறினார்.
இளம் தலைமுறையினருக்கு தனது முக்கிய அறிவுரையாக கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கனவுகள் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
பேட்டி: அபினவ் பிந்த்ரா, இந்திய ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் வீரர்.

