விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள மத்திய சேனை கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்குச் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக முதற்கட்டமாக ரூ.1.31 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் தெரிவித்ததாவது:
"மத்திய சேனை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் - சின்னம்மாள் தம்பதியின் 6 வயது மகள் ஹரிணி, கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பினால் அவதியுற்று வருகிறார். அச்சிறுமிக்குச் சிகிச்சை அளிக்க சுமார் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், விருதுநகர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் முதற்கட்டமாக ரூ.1,31,000 திரட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமிக்குத் தேவையான அறுவை சிகிச்சையை உடனடியாகச் செய்து தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."
திரையரங்கக் காணொளி சர்ச்சை - தேமுதிகவிடம் மன்னிப்பு:
தொடர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டபோது திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட காணொளி குறித்து விளக்கமளித்த அவர், "எங்களது கட்சி நிர்வாகி ஒருவர் வெளியிட்ட அந்த வீடியோ எனது கவனத்திற்கு வராமல் நடந்தது. அது எனது கவனத்திற்கு வந்திருந்தால் நூறு சதவீதம் அதை அனுமதித்திருக்க மாட்டேன். எனது நிர்வாகி செய்த தவறுக்காகத் தேமுதிகவின் மாவட்ட மற்றும் நகரக் கழக நிர்வாகிகளை அழைத்து மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளேன். மேலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மக்கள் சேவையில் மாற்றம் இல்லை:
தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், "நான் ஆரம்பத்தில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தேன். தேர்தலில் போட்டியிட்டபோது, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரனை எனது மூத்த சகோதரராகவே பாவித்தேன். அன்றைக்கு மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தேனோ, அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் இருக்கிறேன். மக்கள் இயக்கத்தில் இருந்தபோதும், மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியபோதும், தற்போது எம்.எல்.ஏ-வாக உயர்ந்த பிறகும் மக்களுக்குச் சேவை செய்வதில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" எனக் குறிப்பிட்டார்.
குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு:
பொதுமக்கள் சந்திக்கும் உள்கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்துக் கூறுகையில், "சில பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்துப் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்டிருந்தீர்கள். அதனடிப்படையில் உடனடியாக நாங்களும் கள ஆய்வு செய்து அதனைச் சரிசெய்துள்ளோம். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் உள்ளன. குழாய்கள் இணைப்பு மற்றும் முறையான குடிநீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் விவாதித்துள்ளோம். விரைவில் பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றிச் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

