டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் எஸ். நிஷான் மற்றும் எஸ். நிசாந்தினி ஆகிய இருவரும், டெல்லியில் நடைபெறும் தென் மண்டல அளவிலான குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கான பூர்வாங்கப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக, சங்ககிரியில் உள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் நவம்பர் 23, 2026 முதல் டிசம்பர் 2, 2026 வரை நடைபெறவுள்ள பயிற்சியில் மாணவர் நிஷான் கலந்துகொள்ள உள்ளார். மேலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் டிசம்பர் 22, 2026 முதல் டிசம்பர் 30, 2026 வரை நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் மாணவி நிசாந்தினி பங்கேற்க உள்ளார்.
தேசிய அளவிலான இந்நிகழ்ச்சிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ-மாணவிகள் இருவரையும், கல்லூரி முதல்வர் ஷீலா பானு, பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் சக மாணவர்கள் நேரில் பாராட்டித் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.








