திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில், கோட்டாச்சியர் ராஜாகோபால் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகன் என்பவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும், விவசாயிகள் குறைதீர் கூட்டங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் முறையாகப் பங்கேற்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், மனுக்கள் அளித்தும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை எனவும் கூட்டத்தில் பங்கேற்ற இதர விவசாயிகளும் தங்களது தொடர் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.

