1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதியன்று லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்' என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் நாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (21.10.2026) திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர் நினைவுச் சின்னத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தங்கள் சீருடைகளில் கருப்பு ரிப்பன் அணிந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் போது உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடந்த ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினரின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர், 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவல்துறையினருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

