திருவாரூர் - மன்னார்குடி சாலையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததைக் கண்டித்து, பாரதி மூலங்குடிப் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலைப் பணிகள் காரணமாக அப்பகுதியில் தேங்கிய மழைநீரால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் இறங்கினர். திடீர் மறியல் காரணமாக திருவாரூர் - மன்னார்குடி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இருப்பினும், ஆபத்தை விளைவிக்கும் பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் இல்லாவிட்டால் தீவிர போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

