புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி அருகே நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், உரிய நீதி கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் - சத்யா தம்பதியரின் மகள் ஜெயஸ்ரீ, பொன்னமராவதி பகுதியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று இரவு தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். மாணவியின் இறப்பு குறித்து குடும்பத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்காமல், மருத்துவமனை நிர்வாகம் ஜெயஸ்ரீயின் உடலைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்துள்ளது.
தாமதமாகத் தகவல் அறிந்த உறவினர்கள் இன்று மருத்துவமனை முன்பு திரண்டு, உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள்:
- தனியார் மருத்துவமனையில் தொடரும் இது போன்ற அசம்பாவிதங்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும்.
- இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிறுவனர் அழகேசனை கைது செய்ய வேண்டும்.
- சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பூட்டி சீல் வைக்க வேண்டும்.
சம்பவ இடத்திற்கு வந்த உயர் காவல்துறை அதிகாரிகள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.









