மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கொள்ளிடம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சரவணன் கலந்துகொண்டு பேசுகையில், பட்டாசு கடைகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்தும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: "கடை உரிமையாளர்கள் தங்களது கடையின் உரிமம், வெடி இருப்பு பதிவேடு மற்றும் கொள்முதல் பதிவேடு ஆகியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மட்டுமே பட்டாசுகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். தீ தடுப்பு உபகரணங்களை முழுமையாக அமைத்த பின்னரே வணிகம் செய்ய வேண்டும். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தடையின்மைச் சான்று (NOC) பெற்றிருக்க வேண்டும்.
கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கட்டாயம் காப்பீடு செய்திருக்க வேண்டும். அனைத்துக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, சீனப் பட்டாசுகளை விற்பனை செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி சீனப் பட்டாசுகள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்," என்று அவர் எச்சரித்தார்.



