Settings

முகப்பு/நகரங்கள்/மலைவாழ் மக்களின் படிப்பறிவை ஏளனம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு?
நகரங்கள்

மலைவாழ் மக்களின் படிப்பறிவை ஏளனம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு?

🕒 30 அக்., 2026, 09:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மலைவாழ் மக்களின் படிப்பறிவை ஏளனம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு?
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நிலப் பிரச்சினை தொடர்பாக மலைவாழ் குடும்பத்தினரை மிரட்டியதுடன், படிப்பறிவை ஏளனம் செய்து மகனைத் தாக்கியதாக செம்மேடு போலீசார் மீது புகார் எழுந்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே நிலப் பிரச்சினை தொடர்பாக செம்மேடு காவல் நிலையக் காவல்துறையினர் மலைவாழ் குடும்பத்தினரை மிரட்டியதுடன், படிப்பறிவை ஏளனம் செய்து மகனைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்லிமலை அரியூர் சோளக்காடு அருகேயுள்ள பனஞ்செட்டிப்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் கணபதி (47). இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகன் ஜீவா (25). இப்பகுதியில் கணபதி பல ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். இதனிடையே, மால்கோ நிறுவன மேலாளருடன் கணபதியின் வீட்டிற்குச் சென்ற செம்மேடு காவல் நிலையக் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இடத்தின் சர்வே எண் வேறு நபரிடம் இருப்பதாகத் கூறி வீட்டை உடனடியாகக் காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.

இதற்கு கணபதியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துவிடுவதாகவும், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக் கொள்ளலாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய கணபதியின் மகன் ஜீவாவிடம் ஒருமையில் பேசியதுடன், அவரைத் தாக்கியதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

"நாலு லைன் படிக்கத் தெரியுமா?" எனக்கூறி மலைவாழ் மக்களின் படிப்பறிவை காவல்துறையினர் ஏளனம் செய்து இழிவுபடுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் மனமுடைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்பொழுதும் காவல்துறையினர் அலட்சியமாகப் பேசியதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கணபதியின் மனைவி மல்லிகா தெரிவிக்கையில், கடந்த 1961ஆம் ஆண்டு மால்கோ மைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் தங்கியிருந்தபோது தங்களது தாத்தா, பாட்டி அவர்களுக்கு இடம் வழங்கியதாகவும், தற்போது அந்த இடம் மால்கோ நிறுவனத்தின் பெயரில் இருப்பதாகக் கூறி காவல்துறையினர் தங்களை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

நில உரிமை தொடர்பான விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டிய நிலையில், மலைவாழ் குடும்பத்தினரை மிரட்டியதுடன் அவர்களின் படிப்பறிவை ஏளனம் செய்ததாக எழுந்துள்ள புகார்கள் அப்பகுதியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔