வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில், நகர்ப்புறப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கான இலவச பயணச் சலுகை அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கடந்த ஆட்சிக் காலத்தில் நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது பாதுகாவலர்களுக்கும் இலவச பயணச் சலுகை வழங்கப்பட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் இச்சலுகை விரிவுபடுத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட போதிலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையிலும், இத்திட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு இலவச பயணச் சலுகைக்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.





