திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இறந்த நபரின் பெயரில் வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், வார்டு உறுப்பினர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் ஏஜாஸ் அஹமது தலைமையில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் 36 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் மற்றும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடந்த 9 மாதங்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ராமமூர்த்தி என்பவர் இறந்து 4 மாதங்கள் ஆன நிலையிலும், இறந்த நபரின் பெயரில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் நகராட்சிப் பகுதி கட்டடங்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டு மிரட்டி வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், குறிப்பிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் அளிக்கும் மனுக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து அதனைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதால், தாе்கள் பணியாற்றவில்லை என பொதுமக்கள் கருதுவதாக உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

