நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பைக் பழுதுநீக்கும் மையத்தில், மோட்டார் மூலம் வாகனம் கழுவப்பட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மெக்கானிக் உயிரிழந்தார்.
நாமகிரிப்பேட்டை நடுவீதி அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது மகன் கார்த்திக் (26). இவர், நாமகிரிப்பேட்டை ஆத்தூர் பிரதான சாலையில் யூனியன் வங்கி அருகில் உள்ள பைக் பழுதுநீக்கும் பட்டறையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை, பழுதுநீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட பைக்கை வாட்டர் வாஷ் செய்வதற்காக பட்டறைக்கு எதிரே உள்ள பகுதிக்கு கார்த்திக் கொண்டு சென்றுள்ளார். அப்போது மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தண்ணீர் வழியாக மின்சாரம் பாய்ந்து கார்த்திக் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீண்ட நேரமாகியும் கார்த்திக் திரும்பாததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








