திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, செங்கம் சாலையில் உள்ள சந்தைமேடு மைதானத்தில் மாட்டுச் சந்தை மற்றும் குதிரைச் சந்தை கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தீபத் திருவிழாவின் முக்கிய நாட்களை முன்னிட்டு நடைபெறும் இந்தச் சந்தையில், கால்நடைகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சந்தைக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாட்டு மாடுகள், கறவை மாடுகள், எருதுகள், ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் எருமை மாடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன. மாடுகளின் தரம் மற்றும் வயதிற்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாக வியாபாரி காசிநாதன் தெரிவித்தார். தற்போது வரை ஒரு ஜோடி மாடுகள் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ள நிலையில், சந்தையின் உச்சகட்டமாக ஒரு ஜோடி மாடு ஐந்து லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாடுகளுடன் சேர்த்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகள் மற்றும் ஒட்டகங்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக காட்டுவாடு, மார்வா, சிந்தி, குஜராத்தி மற்றும் ஒளி போன்ற உயர் ரக குதிரைகள் சந்தையின் முக்கிய ஈர்ப்பாக உள்ளன. குதிரை வியாபாரி சாமி கூறுகையில், 'குதிரைகளின் விலை 5,000 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது குதிரைகளின் வரத்து சற்று குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.









