கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு இமயமலைப் பகுதியிலிருந்து குளிர்கால வலசைக்காக வருகைதரும் சாம்பல் வாலாட்டி பறவைகளை வரவேற்கும் விதமாக வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பறவைகள் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரத்தில் வரத்தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை சுமார் 7 மாதங்கள் வால்பாறையில் தங்கியிருக்கும். நீரோடைப் பகுதிகளையொட்டியே வாழும் தன்மை கொண்ட இப்பறவைகளைப் பாதுகாக்க, அவை வாழும் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் மாணவர்களிடம் விளக்கினார்.
மேலும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் பறவைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை அவர் விரிவாக எடுத்துக்கூறினார். பறவைகளின் வருகையை வரவேற்கும் வகையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், இப்பறவை தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சிவன் ராஜ், வால்பாறை வனச்சரக தனியார் காடுகள் பிரிவு வனவர் கணேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.









