திருத்தணியில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மாணவர் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் முகேஷ் (19), திருவள்ளூர் மாவட்டம் அரிகல்பட்டைச் சேர்ந்தவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு முகேஷும் அவரது நண்பர் கண்ணனும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதே கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயிலும் அரக்கோணத்தைச் சேர்ந்த மனோஜ் (19), கண்ணனை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் முகேஷ் நின்றுகொண்டிருந்தபோது, மனோஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து முகேஷின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த முகேஷ், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், திருத்தணி பெரியார் நகர் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த நவீன் (23), பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த புருஷோத்தமன் (19) மற்றும் கேசவன் (19) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மூவரும் திருத்தணி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

