வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பனிமூட்டம் அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் வழங்கப்பட்டு வருவதுடன், பாதுகாப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள் தெரியாத சூழல் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை மெதுவாக இயக்கிச் செல்வதுடன், உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகொண்டா சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் ரோந்துப் பணியாளர்கள் மூலம் கடந்த வாரம் முதல் தினமும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் வழங்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமாக, அதிகாலை நேரப் பயணத்தில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தூக்கத்தை விரட்டுவதும், பனிப்பொழிவால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதும் ஆகும் என சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேநீர் வழங்கும் போது வாகன ஓட்டிகளிடம் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள், நடைபெறும் சாலைப் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது. வாகனங்களை கவனமாக இயக்குவது, தூக்கம் வந்தால் சாலையோரமாக வாகனத்தை நிறுத்துவது மற்றும் முகப்பு விளக்குகளை கட்டாயம் எரியவிடுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
பனிப்பொழிவு காலம் நீடிக்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் வரை இந்த விழிப்புணர்வு மற்றும் தேநீர் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த முயற்சி பெரும் வரவேற்பையும் பாராட்டும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.









