வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சுற்றி புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் 'வீ தி லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பினர் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் மாவட்டப் பிரதிநிதி ரஜினி ராஜ்குமார் மற்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இந்தக் கோரிக்கை மனுவை நேரில் அளித்தனர். அம்மனுவில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் அருகிலுள்ள கடைகளில் சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் (COTPA 2003) பிரிவு 6(b)-ன் படி, கல்வி நிறுவனங்களின் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மாணவர்களின் உடல்நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்களின் அருகிலுள்ள கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், விதிகளை மீறி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்களிடையே புகையிலைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.





