தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மழைநீர் தேங்கக்கூடிய மேலப்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை, திருச்சி மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சரான இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று (அக்.25) இரவு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கனமழையின் போது அங்கே மழைநீர் தேங்கினால், அதனை உடனுக்குடன் அகற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள், மாநகராட்சி ஆணையர் பொன்மணி மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைசந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், மாநகரில் முக்கியமாக மழைநீர் தேங்கக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம். நாம் ஆய்வு செய்த இதே மேலப்புதூர் சுரங்கப்பாதையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மழைநீர் தேங்கியிருந்தது. உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு சரிசெய்ய அறிவுறுத்தியதை தொடர்ந்து, அங்கிருந்த அடைப்புகள் அனைத்தும் உடனடியாக சீரமைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தப் பாலத்தில் மீண்டும் தண்ணீர் தேங்காமல் இருக்க இருபுறங்களிலும் உள்ள நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் வழித்தடங்கள் முழுவதுமாக தூர்வாரப்பட்டுள்ளன. மேலும், தண்ணீரை வெளியேற்ற மோட்டார்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாநகரில் மழைநீர் தேங்கக்கூடிய 10 முதல் 11 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கேயும் அடுத்தடுத்து நேரில் ஆய்வு செய்யப்பட உள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலும், போக்குவரத்து தடைபடாமலும் மழைநீர் உடனடியாக வடிந்தோட வேண்டும் என்பதற்காகவே இந்த அவசர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் மிகதுரிதமாக செய்து வருகின்றனர். நிரந்தர தீர்வுக்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அந்தந்த பொறுப்பு அமைச்சர்கள் அப்பகுதியில் இருந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம் என தெரிவித்தார்.
அரசியல்
திருச்சி மாநகரில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
🕒 26 அக்., 2026, 02:26 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

