திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, இந்து மக்கள் கட்சியினர் நாமக்கல்லில் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் அக்கட்சியினர் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் திரண்டனர். அங்கு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், திடீரென சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், நாமக்கல் நகரக் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி உள்ளிட்ட கட்சியினரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்தத் தர்ணா போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









