கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
கரூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டினார். இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தேர்தல் முறைகேடுகள் மூலமே ஆட்சியில் தொடர்வதாகக் குறிப்பிட்டார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய எம்பி ஜோதிமணி, கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரே முகவரியில் போலியான வாக்காளர் பதிவுகள் உள்ளதாகவும், ஹரியானா வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு மாடல்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பல்வேறு மாநில வாக்காளர் பட்டியல்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வெவ்வேறு வரிசை எண்களில் சிதறடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் எனக் வலியுறுத்திய அவர், குடியுரிமையைச் சரிபார்ப்பது உள்துறை அமைச்சகத்தின் பணி என்றும், அதனைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் குறித்து மற்ற தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், இதுதொடர்பாக மத்திய கேபினட் செயலாளருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையை விமர்சித்த ஜோதிமணி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சரைத் தேர்வுக் குழுவில் இடம்பெறச் செய்திருப்பது ஆளும் கட்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதாகத் தெரிவித்தார். டெல்லியில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளைக் கண்டித்து, வரும் 30ஆம் தேதி டெல்லியில் மக்கள் மன்ற விசாரணையும், டிசம்பர் 1ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட போராட்டமும் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்தார். இந்தப் போராட்டங்களில் தமிழ்நாட்டிலிருந்து பொதுமக்களும் கட்சியினரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

