திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று நின்றிருந்த நிலையில், தேங்கிய நீரை வடிய வைக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். எனினும், நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் மீண்டும் கனமழை பெய்து வருவதால் குடவாசல் வட்டாரத்தில் நிலைமை மோசமாகியுள்ளது.
குறிப்பாக குடவாசல் அருகே உள்ள அரசூர், மேலப்பாளையூர், ஓகை உள்ளிட்ட பகுதிகளில், நடவு செய்யப்பட்டு முப்பது நாட்களான சம்பா நெல் பயிர்கள் முழுமையாக மழைநீரில் மூழ்கியுள்ளன. ஒரு ஏக்கருக்கு இதுவரை 10,000 ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளதாகவும், தொடர் மழை காரணமாக பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

