திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக, இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்த மாணவி, கல்விக்கடன் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு, தனது தாயார் கோமதியுடன் வந்த பிரேமலதா, கல்வி உதவி கோரி மனு அளித்தார். பின்னர், கட்டணம் செலுத்த முடியாத சூழலால் விரக்தியடைந்த தாயார் கோமதி, ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ஆலங்காயம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், மாணவியின் குடும்பத்தினரைத் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். மாணவியின் கல்வித் தடையை நீக்கும் நோக்கில், நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மொத்தம் ரூ. 1.05 லட்சத்தை முழுமையாகத் தான் ஏற்பதாக அவர் உறுதியளித்தார். முதற்கட்டமாக ரூ. 60 ஆயிரத்தை மாணவியிடம் வழங்கினார்.
தன்னுடைய கல்விக்கு உதவிக்கரம் நீட்டிய வி.எஸ்.ஞானவேலனுக்கு மாணவியின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த மாணவியின் கல்விக்கு உதவிய திமுக நிர்வாகியின் இந்த மனிதாபிமானச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.









