கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறியதாவது:
"திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது அனைத்து மக்களின் கோரிக்கையாகும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் தீபம் ஏற்ற அறிவுறுத்தியும் தமிழக அரசு அதனை மறுத்து வருகிறது. இப்பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தீபத் தூண் இல்லை என நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதிடப்படுகிறது. 1923-ம் ஆண்டு முதல் தொடரும் இவ்வழக்கில் பல்வேறு நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தீபத்தின் உரிமையை உறுதி செய்துள்ளன. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? தீபம் ஏற்றுவதில் என்ன சிக்கல் உள்ளது?" என்று கேள்வியெழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், "சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் தவறியுள்ள அரசு, யாரைக் காப்பாற்ற முயல்கிறது? காவிரி நீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடகாவில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு தண்ணீர் திறக்க மறுப்பதை முதல்வர் கண்டுகொள்ளவில்லை. திருக்கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றுவது நமது பாரம்பரிய ஐதீகம். உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழக அரசு இதனைத் தடுக்க முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றார்.









