திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தல் மற்றும் விவசாயிகளை கூடுதல் இணைப் பொருட்களை வாங்கக் கட்டாயப்படுத்திய புகாரின் அடிப்படையில், 7 தனியார் உரக் கடைகளின் விற்பனை தடை செய்யப்பட்டு, உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசு உத்தரவுப்படி, ஒரு மூட்டை யூரியா உரத்தின் அதிகபட்ச விற்பனை விலை (MRP) ரூ. 270 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில தனியார் கடைகளில் ரூ. 300-க்கும் மேல் விற்கப்படுவதாகவும், அதனுடன் 'வாலி' எனப்படும் கூடுதல் இணைப்பொருளை ரூ. 700 கொடுத்து வாங்கினால் மட்டுமே உரம் வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதன் மூலம் உரம் மற்றும் இணைப்பொருள் சேர்த்து மொத்தம் ரூ. 1,000 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் இந்தப் புகாரைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரின் உத்தரவின்பேரில், திருத்துறைப்பூண்டி வட்டாரத்திலுள்ள தனியார் உரக்கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிக விலைக்கு உரம் விற்ற திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 4 உரக்கடைகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், விதிகளை மீறிய மற்ற 3 உரக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்தும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் எங்குனும் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் அல்லது கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் தனியார் உரக்கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.









